மணிப்பூரில் காணப்படும் அமைதியற்ற சூழலை அடுத்து, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து பாடசாலைகளும் இன்றும், நாளையும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல்கள் ஏற்பட்டன. இதில், இரு தரப்பிலும் சேர்த்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதன்பின்னர், பல மாதங்களாக அமைதியான சூழல் காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், 11 பேர் உயிரிழந்தனர்
இந்நிலையில், பொலிஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, 5 நாட்களுக்கு இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, வன்முறையால் பாதித்த காக்சிங்கின் சுக்னு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டு பாதுகாப்பு படைகள் கொடி அணிவகுப்பு பேரணியை நேற்று நடத்தினர். மணிப்பூரில் நிலைமை மோசமடைந்துள்ள சூழலில், மணிப்பூர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த பல்கலைக்கழகத்துடன் 2 மருத்துவ கல்லூரிகள் உள்பட 116 கல்லூரிகள் இணைந்துள்ளன. புதிய தேர்வு காலஅட்டவணையை பற்றி அறிந்து கொள்ள manipuruniv.ac.in என்ற வலைதளத்திற்கு சென்று மாணவர்கள் பார்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மறுஅறிவித்தல் வரை இந்த நிலை தொடரும் என்பதோடு, மறுதேர்வு திகதிகள் பற்றிய அடுத்த அறிவிப்புகளை அறிந்து கொள்வதற்கு, அதிகாரப்பூர்வ பல்கலைக்கழக வலைதளம் உள்ளிட்ட வழிகளை தொடர்ந்து தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் காணப்படும் அமைதியற்ற சூழலை அடுத்து, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து கல்லூரிகளும் இன்றும், நாளையும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மேனிலை மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான இணை செயலாளர் லைஷ்ராம் டோலி தேவி பிறப்பித்துள்ளார்.