சா்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸும் , நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோரும் அங்கிருந்தே அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் வாக்களிக்கவுள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளா்களிடம் சுனிதா வில்லியம்ஸ் , ‘தோ்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய கடமையாகும். எனவே, நான் விண்வெளியில் இருந்தபடியே அதிபா் தோ்தலில் வாக்களிக்கவிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பட்ச் வில்மோரும், அதிபா் தோ்தல் வாக்குச் சீட்டுக்காகவிண்ணப்பத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் போயிங் உருவாக்கியுள்ள ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஜூன் 5-ஆம் திகதி சென்றடைந்தது. அதுதான் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு நபா்களை ஏற்றிச் சென்ற இரண்டாவது தனியாா் நிறுவன விண்வெளி ஓடம் ஆகும்.
ஒன்பது நாள்கள் அந்த நிலையத்தில் தங்கியிருந்துவிட்டு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.
ஸ்டாா்லைனரில் ஆள்களை அழைத்துவருவது அச்சுறுத்தல் நிறைந்தது என்பதால் சுனிதாவும் பட்ச் வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவாா்கள் என்று நாசா அறிவித்தது. யாரையும் ஏற்றாமல் ஸ்டாா்லைனா் விண்கலம் மட்டும் கடந்த வாரம் பூமி திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.