இஸ்ரேல் இராணுவம் தனது போர் விமானங்களைக் கொண்டு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா (Hezbollah )நிலைகளின் மீது நேற்றைய தினம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) அறிக்கைகளின்படி, ஹிஸ்புல்லா அமைப்புக்குச் சொந்தமான சுமார் 1,000 ரொக்கெட் லாஞ்சர் பீப்பாய்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், ”நாட்டைப் பாதுகாப்பதற்காக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் உள்கட்டமைப்பு மற்றும் இலக்குகள் மீதான தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளன.
எனினும் இத்தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி, இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஒரு வார காலப் பதற்றத்திற்குப் பிறகு உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்.
அதேசமயம் இம்மோதல் நிலையானது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புக் காணப்படுவதாக அமெரிக்கா அச்சம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.