மறைந்த முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது.
மத்துகம பொதுமயானத்தில் இன்று பிற்பகல் 4 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம உடல்நலக்குறைவினால் தனது 74 ஆவது வயதில் நேற்று முன் தினம் அதிகாலை காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி பிறந்த அவர் 42 வருடகால அரசியல் அநுபவம் கொண்டவர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினராக நீண்ட காலம் செயற்பட்ட துடன் பொதுஜன ஐக்கிய முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடனும் இணைந்து செயற்பட்டார்.
2020 பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டதுடன் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திலும் அங்கம் வகித்தார்.
இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி 2021 ஆம் ஆண்டு நவலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகவும் செயற்பட்டார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் குமார வெல்கம கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராகவும், போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 1994 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டார்
2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அமைச்சு பதவிகளை வகித்தார். 2004-2005 மின்சக்தி எரிசக்தி பிரதியமைச்சராக பதவி வகித்தார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் போக்குவரத்து அமைச்சராகவும் பதவிவகித்தார். நாடாளுமன்றில் தனித்துவம் வாய்ந்த ஒருவராகவும் கருதப்படுகின்றார்.
மறைந்த அன்னாரது பூதவுடல் களுத்துறையில் உள்ள மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக மத்துகமவில் உள்ள அவரது வீட்டிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த நிலையில் அன்னாரது பூதவுடலுக்கு பௌத்த மதகுருக்கள் பிரதேச மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.