ஜனாதிபதி இலஞ்சம், ஊழல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைப் போன்று எம் மீனவர்களையும், கடலையும் காப்பாற்ற வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவரும், வடமாகாண கூட்டுறவு சங்கத்தின் உப தலைவருமான வி.அருள்நாதன் தொிவித்துள்ளாா்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (30.09.2024) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிதாக வந்திருக்கும் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மீனவ மக்கள் சார்பில் நல்லமுறையில் நாட்டை கொண்டு செல்வதற்காக வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.
கடற்தொழிலில் அதிகமான வளத்தை கொண்டிக்கும் இறால் தொழில் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இத் தொழிலிற்கு இடையூறாக இருந்தது இந்தியன் இழுவை படகு.
கடலடி நேரத்தில் நாங்கள் தொழிலுக்கு செல்லாமல் இருக்கும் போது 50 மேற்பட்ட படகுகளை கொண்டுவந்து எமது வாழ்வாதாரத்தை சுரண்டும் நிலை இருந்தது. இதற்கு முன்னரும் இப்படி நடந்தது.
அதற்கு முன்னாள் கடற்துறை அமைச்சரிடம் வைத்த கோரிக்கைக்கு அமைவாக அத்துமீறி நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
தற்பொழுது கடற்துறை அமைச்சராக ஜனாதிபதி இருப்பதானால் நாம் சில கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். காரணம் இந்திய இழுவைப் படகுகள் மட்டுமல்ல, சட்டவிரோத மீன்பிடி தொழில்கள், அங்கீகரிக்கப்படாத தொழில்களை எமது கடற்பகுதிகளில் செய்கிறார்கள்.
இரவில் சுருக்குவலை, டைனமிற் பயன்படுத்தபடுகின்றது. இதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆகவே ஜனாதிபதி இலஞ்சம், ஊழல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றார்.
அதே போன்று எம் மீனவர்களையும்இ கடலையும் காப்பாற்றவேண்டும். அத்தோடு சட்டவிரோத தொழிலை நிறுத்தி சட்டத்திற்குட்பட்ட தொழிலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எமக்கு நல்ல ஜனாதிபதி வந்திருக்கின்றார். ஆகவே எமது பிரச்சினையை தீர்ப்பார் என நம்புகின்றோம்” என அவா் மேலும் தெரிவித்தார்.