சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறார்களுக்கும் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை உள்ளிட்ட மிருகக்காட்சி சாலைகள் மற்றும் சரணாலயங்களை இலவசமாக பார்வையிட இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் முதலாம் திகதியான இன்று கொண்டாடப்படும் சர்வதேச சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் தெஹிவளை மிருகக்காட்சி சாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருகக்காட்சிசாலை, ரிதிகம சபாரி பூங்கா ஆகியவற்றை இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தேசிய விலங்கியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷனி, ரிதிகம சபாரி தேசிய பூங்காவில் கடந்த மே மாதம் பிறந்த மூன்று சிங்கக் குட்டிகளுக்குப் பெயர் சூட்டும் நிகழ்வு பின்னவல மிருகக்காட்சி சாலையில் இன்று நடைபெற்றது.
அத்தோடு, இன்று முதல் இந்த மூன்று சிங்கக் குட்டிகளும் பொதுக் கண்காட்சிக்கு அனுமதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை வளாகத்தில் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.