இராஜதந்திர உறவுகளில் அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சமமான முறையில் செயற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாம் எந்த நாட்டையும் சிறப்பானதாகக் கருதவில்லை. நாடு சிறியதோ பெரியதோ, அனைத்து நாடுகளுடனும் இலங்கை இராஜதந்திர உறவுகளைப் பேணுகிறது.
எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, கியூபா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளோம்.
இந்தியாவை போலவே சீனாவையும் கையாளுகிறோம். சீனா ஊடாக விகாரைகளுக்கு சோலார் பேனல்களை வழங்கும் திட்டம் உள்ளது. அத்துடன் இன்னும் சில தினங்களில் சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது.
அதற்கான அனுமதியை வழங்கியுள்ளோம். இதனால் இலங்கையின் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
முன்னதாக, அமெரிக்க, இந்திய மற்றும் ஜெர்மன் போர்க்கப்பல்கள் வந்துள்ளன. இதுபோன்ற இராஜதந்திர உறவுகளில், அனைத்து நாடுகளுடனும் சமமாக நடந்து கொள்கிறோம்” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.