இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரியும், தற்போது இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க கோரியும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரியும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிட போவதாக பா.ம.க. அறிவித்திருந்தது.
அதன்படி வள்ளுவர் கோட்டம் அருகே பா.ம.க.வினர் திரண்டனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமை தாங்கினர்.
மேலும் சத்ரிய நாடார் இயக்க நிறுவனர் சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மீனவர் கிராமங்களான தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். போராட்டத்தில் ஏ.கே.மூர்த்தி பேசும்போது, “கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இலங்கை சிறையில் மொட்டை அடித்து அவமானப்படுத்துகிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்த தமிழக அரசுக்கு மீனவர்கள் படும் பாடு தெரியவில்லையா? இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு தீவிர அழுத்தம் கொடுத்து நிரந்தர தீர்வுகாண முன்வர வேண்டும். தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்களே என்பதை கருத்தில் கொண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
எல்லையில் இந்திய மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு சிறைகளிலும் வாடும் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
உடமைகளை திருப்பிக் கொடுக்க வேண்டும். இரு நாட்டு பிரதிநிதிகள் குழு அமைத்து பேச்சுவார்த்தை மூலம் உடனடி தீர்வை எட்ட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட புறப்பட்டார்கள் அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் 5 பேரை மட்டும் மனு கொடுக்க அழைத்து சென்றனர்.