மன்னார் முசலி பிரதேசத்தில் லைகாவின் ஞானம் அறக்கட்டளையால் முன்னெடுக்கப்பட்ட சமுதாய குடிநீர் விநியோகத்திட்டம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொண்டச்சிக்குடா, கொக்குப்படையான் கிராம மக்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சுத்தமான குடி நீர் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் தமது கிராமத்தில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு குறித்த கிராமத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புகள் ஊடாக லைகாவின் ஞானம் அறக்கட்டளை இடம் கோரிக்கையை முன் வைத்தனர்.
குறித்த கோரிக்கைக்கு அமைவாக மன்னாரில் உள்ள லைகாவின் ஞானம் அறக்கட்டளையின் பணியாளர்கள் ஊடாக குறித்த கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் சமுதாய குடிநீர் விநியோகத்திட்டம் அமைக்கப்பட்டு, நேற்றையதினம் பயனாளிகளிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
மன்னார் லைகாவின் ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் முசலி பிரதேச செயலாளர், கிராம அலுவலர் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட அதிகாரிகள் வருகை தந்து நீர் விநியோகத் திட்டத்தை வைபவ ரீதியாக பயனாளிகளிடம் கையளிதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.
சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும்.