ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் கொள்கைப் பிரகடனத்தை மிக விரைவில் வெளியிடவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
எமது சகோதர தொலைக்காட்சியான சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பான, ஹரிமக நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மக்கள் மத்தியில் நான் சென்றவுடன் ஒரு விடயத்தை அவதானத்தேன். சமூக ரீதியாக பெரும்பாலானோர் அரசியல் கட்சிகள் தொடர்பாக பாரிய அதிருப்தியுடன்தான் உள்ளார்கள்.
உயர்நீதிமன்றத்தினாலேயே, கொள்ளையர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்கூட, அரசியல் கட்சிகளை ஆரம்பித்துள்ளார்கள். இதனால், புதிய கட்சியொன்றை ஸ்தாபித்தால் அது இந்நாட்டு மக்களுக்கு பலனுள்ளதாக அமையும் என்று நான் நம்பினேன்.
நாட்டில் இன்று இருக்கும் முக்கியமான பிரச்சினைதான் ஊழல். அபிவிருத்திக்கான தொலைநோக்கு சிந்தனைக் கொண்ட தலைவர் ஒருவரும் நாட்டில் இன்று இல்லை.
இப்படியான தலைவருக்கான வெற்றிடம் காணப்படுவதாலேயே, எமது தொலைநோக்கு சிந்தனையை செயற்படுத்துவதற்காக முதற் கட்டமாக நாம் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஞ்சன் ராமநாயக்காவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்களை இங்கு காணலாம்.
………………..
கேள்வி – நாடளாவிய ரீதியாக அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளீர்களா? வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளீர்களா?
பதில் -ஆம். வடக்கு – கிழக்கிலும் நாம் போட்டியிட எதிர்ப்பார்த்துள்ளோம். ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை தவிர்ந்த ஏனைய அனைத்து இடங்களிலும் நாம் போட்டியிடவுள்ளோம்.
……………………
கேள்வி – ஏன், தெற்கு அரசியலுக்கு பயமா? அல்லது தெற்கிற்கே பயமா?
பதில் – இல்லையில்லை. எமக்கு மிகவும் குறுகிய காலம்தான் கிடைத்துள்ளது.
…………………….
கேள்வி- ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அரசியலில் தற்போது ஈடுபடமுடியுமா?
பதில் – ஆம். எனக்கு வாக்களிக்கவும் வேட்பாளராக களமிறங்கவும் எந்தத் தடையும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்கவே நான் தற்போது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளேன்.
கொலை செய்தவர்களுக்கும், கொள்ளையடித்தவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எனக்கோ முழுமையான பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தொடர்புக் கொண்டு இதுதொடர்பாக கேட்டிருந்தோம். அவரும், எனக்கு வழங்கப்பட்டுள்ளது முழுமையான பொது மன்னிப்பு அல்ல என்று தெரிவித்திருந்தார்.
எனது மூளை கசப்பான உண்மைகளை வெளிக்கொண்டுவருவதற்காகத்தான் செயற்படுகிறது.
………….
கேள்வி – இன்னும் யாருடைய குரல் பதிவுகள் உங்களிடம் உள்ளன? யாருடைய குரல் பதிவுகள் உள்ளன வெளியே வர?
பதில் -ஒரு இலட்சத்து 76 ஆயிரம் குரல் பதிவுகள் இருந்தன. இவற்றை நான் நாடாளுமன்றிலும் சமர்ப்பித்தேன். பாரிய மோசடிகள் தொடர்பாக அவை காணப்பட்டன. பண்டோரா ஆவனம் தொடர்பான காணொளிகளும் இருந்தன.
மத்திய வங்கிப் பிணை முறி மோசடி குறித்த தகவல்கள், வசிம் தாஜுடீனின் மரணம், ஹெக்னெலிகொட மரணம் தொடர்பான விடயங்களும் இருந்தன.
இந்த நிலையில், குரல் பதிவுகளை பெற்ற தரப்பினர், அவற்றை திரிபு படுத்தினார்கள். நான் பெண்களுடன் கதைத்த விடயங்களை மட்டும்தான் வெளியே விட்டார்களே ஒழிய, அவர்களுக்கு ஆபத்தான எந்தவொரு விடயத்தையும் அவர்கள் வெளியிடவில்லை.
மோடியான ஜனாதிபதிகளின் குரல் பதிவுகளைக்கூட நான் கொடுத்திருந்தேன். அவ்வாறு 21 குரல் பதிவுகள் இருந்தன.
இவற்றை நான் நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்த நிலையில், அவை இன்று அழிக்கப்பட்டுள்ளன.
இவை இன்னமும் வழக்காடு பொருள் என்ற வகையில், நீதிமன்றில் உள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்தினர் இந்த குரல் பதிவுகளை கேட்பதாகக் கூறி, இன்னமும் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் குரல் பதிவுகளில் எந்தவொரு இடத்திலும் ரஞ்சன் ராமநாயக்க, இலஞ்சம் கேட்டார், கப்பம் கேட்டார், கொலை செய்ய திட்டம் தீட்டினார் என்று யாராவது ஒருவரால் கூறமுடியுமா?
முன்னாள் நாடாளுமன்றில், 100 பேரிடம் மதுபான சாலைக்கான அனுமதிப் பத்திரங்கள் உள்ளன. 75 பேரிடம் மணல் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். 3 பேர் நாட்டுக்கு போதைப்பொருட்களை கொண்டுவருகிறார்கள். சூதாட்டத்தில் ஈடுபடும் ஒருவர் உள்ளார். தங்கச் சங்கிலிகளைப் பறிக்கும் ஒருவர் உள்ளார்.
இப்படியான நபர்களை மீண்டும் நாடாளுமன்றுக்கு அனுப்ப வேண்டாம் என்றுதான் நான் மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
………………
கேள்வி- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ள நீங்கள் தயாரா?
பதில் – கடந்த காலங்களில் நான் இதுதொடர்பாக நிரூபித்துக் காண்பித்திருந்தேன்.
225 உறுப்பினர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவை வேண்டாம் என்று சொன்ற ஒரே உறுப்பினர் நான் மட்டும்தான்.
………………
கேள்வி- ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் கொள்கைப் பிரகடனத்தை எப்போது வெளியிடுவீர்கள்?
பதில் – மிக விரைவிலேயே நீங்கள் இதனை பார்க்கலாம்.