நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில், எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்குள்; தெற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 மாவட்டங்களில் 69 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 158, 391 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலையால் இதுவரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 240 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 1,753 குடும்பங்களைச் சேர்ந்த 9, 663 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 20,553 குடும்பங்களைச் சேர்ந்த 82,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதற்கு அடுத்த படியாக கொழும்பு மாவட்டத்தில் 10,914 குடும்பங்களைச் சேர்ந்த 40,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலையால் களு, களனி, ஜிங் மற்றும் அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் குறித்த கங்கைகளை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால், எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி மேற்கு- வடமேற்கு திசையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை அண்மித்த பகுதியான தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.
அதன்படி, நேற்று மாலை 4 மணி முதல் செல்லுபடியாகும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2 ஆம் கட்டத்தின் கீழும், முதலாம் கட்டத்தின் கீழும் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக, பாதுக்கை, களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தநுவர, அகலவத்த, காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, பத்தேகம, நெலுவ, நாகொட, வந்துரம்ப, தவளம் ஆகிய பகுதிகளுக்கு 2 ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்லை, கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொ{ஹபிட்டிய, கேகாலை, மாவனெல்லை, அரநாயக்க, தெரணியகலை. இரத்தினபுரி மாவட்டத்தின் அஹெலியகொட, கிரியெல்ல, அயகம, எலபாத, கலவான, இரத்தினபுரி, குருவிட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் 2 ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் யக்கலமுல்ல, நியாகம, இமதுவ களுத்துறை மாவட்டத்தின் பேருவளை, கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல, பொல்கஹவெல, அலவ்வ, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த, ஓபநாயக்க, பெல்மடுல்ல, நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.