பொதுத் தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிப்பதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சகல ஊடகங்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று ஊடகப்பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், கடந்த வெள்ளிக்கிழமையுடன் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்புமனுத்தாக்கல் செய்வது நிறைவடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியும், சுயேட்சையாகவும் போட்டியிடும் வேட்பாளர்கள் நாடளாவிய ரீதியில் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக ஊடகங்களால் வழங்கப்பட்ட காலப்பகுதியின் நியாய பூர்வத்தன்மை, தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் ஊடகங்களும் அதனை உரியவாறு பின்பற்றி நடந்துகொண்டமையையும் அவர் இதன்போது நினைவுக் கூர்ந்தார்.
அத்தோடு, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவிப்புக்களை மக்களிடம் கொண்டுச் சென்று சேர்ப்பதில் ஊடகங்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
அதே காலப்பகுதியில் சில ஊடகங்களின் நியாயமற்ற நடத்தைகளைச் சுட்டிக்காட்டி, அவை மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலை நியாயமான முறையில் நடத்திமுடிப்பதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறும், இந்தத் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுக்கும் இயலுமானவரை சமத்துவமான பிரசார வாய்ப்பை அளிக்குமாறும் அவர் ஊடகப்பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.