ஆறு வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மன்னார் சதொச, மனித புதைகுழியின் அகழ்வு தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் சதொச மனித புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட நிலையில் இதுவரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த மனித எச்சங்கள் மற்றும் பிற பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை, கடந்த வாரம் வரை இடம்பெற்றிருந்தது.
பல வருடங்களுக்கு பின்னர், கடந்த 7 ஆம் திகதிமுதல் 11 ஆம் திகதிவரையான ஐந்து நாட்களும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரும், சட்ட வைத்திய அதிகாரி குழுவும், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினரும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளும், நீதிமன்ற அலுவலகர்களும் இணைந்து மன்னார் நீதவான் முன்னிலையில் தரம் பிரித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது மனித எலும்புகள் தனியாகவும், அதனுடன் எடுக்கப்பட்ட பிற பொருட்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்பட்டு, பொதி செய்யப்பட்டு பாதுகாப்பாக நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சதொச மனித புதைகுழியிலிருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளோடு, காணப்படும் வேறு பொருட்கள் அடங்கிய பெட்டிகளும் பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மற்றும் அகழ்வினை மேற்கொண்ட தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கோரியுள்ளததாக சட்டத்தரணி நிரஞ்சன் மேலும் தெரிவித்துள்ளார்.