நான் விளையாட்டுப் போட்டிகளில் சம்பாதித்துவிட்டேன். எனவே அரசியலில் சம்பாதிக்க வேண்டியத் தேவை எனக்குக் கிடையாது” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் களுத்துரை வேட்பாளர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இப்போது புதிய ஜனாதிபதியொருவர் தெரிவாகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம், வாகன பெர்மிட் உள்ளிட்ட சலுகைகளை இல்லாதுசெய்துள்ளார்.
நாம் விளையாட்டுப் போட்டிகளில் சம்பாதித்துவிட்டோம். எனவே அரசியலில் சம்பாதிக்க வேண்டியத் தேவை எமக்கு கிடையாது. உண்மையைக் கூறவேண்டுமெனில், பல விடயங்களை கை விட்டுதான் அரசியலில் நாம் இறங்கியுள்ளோம்.
ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் புதிய கட்சி ஊடாக நான் அரசியலுக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இது தூய்மையானதொரு கட்சியாகும். ஏனையக் கட்சிகளின் ஊடாக அரசியலுக்குள் நான் வந்திருந்தால், மோசடியாளர்களுடன் இணைந்துவேலை செய்ய வேண்டியேற்பட்டிருக்கும்.
எமது கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க, ஊழல்- மோசடிகளுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுத்த ஒரு நபராவார். இப்படியான ஒரு தலைவருடன் இணைந்து அரசியல் செய்வதையிட்டு நான் பெருமையடைகிறேன்” இவ்வாறு திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.