தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னெடுத்து வந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
அனைத்துப் பிரச்னைகளும் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு, இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறுவனத்தால் ஏற்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 7 ஆம் திகதி நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையின் முடிவில் தொழிலாளர்களின் கிட்டத்தட்ட 14 கோரிக்கைகள் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வியாழன் அன்று (17) பணிக்கு திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வேலைநிறுத்தம் அண்மைய ஆண்டுகளில் தென் கொரிய தொழில்நுட்ப ஜாம்பவான் கண்ட மிகப்பெரிய பணிப்பகிஷ்கரிப்பாகும்.
சுமார் 2,000 தொழிலாளர்கள் பணிபுரியும் இந்தியாவில் உள்ள இரண்டு ஆலைகளில் ஒன்றான சென்னை நகரில் உள்ள தொழிற்சாலைக்கு அருகில் செப்டம்பர் 9 அன்று தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
தொழிற்சாலையானது வீட்டு உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.
இந்திய நிறுவனத்தின் வருடாந்திர 12 பில்லியன் அமெரிக்க டொலர் (£9bn) வருவாயில் மூன்றில் ஒரு பங்கை வழங்குவதாக பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.