பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியானது, தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், மினுவங்கொடையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க, நாட்டு மக்கள் சார்பாக தொடர்ந்தும் இருப்பதாகத் தெரிவித்தார்.
இது குறித்து ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது ” ஜனாதிபதியிடம் பல பேரின் பைல்கள் உள்ளன. இன்று ஜனாதிபதியுடன் ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன போன்றோர் உள்ளனர்.
திருடர்களை பிடிப்போம் என்று கூறிய தரப்பினருக்கு இன்று ஆட்சியதிகாரம் கிடைத்துள்ளது. நாம் இந்த விடயத்தில் பொறுமையாக இருப்போம். ஏனெனில், தற்போதே திருடர்கள் நடுக்கம் கண்டுள்ளார்கள். நாம் மக்களுக்கு நன்மைகைளை செய்யத்தான் புதியக் கட்சியொன்றை ஸ்தாபித்துள்ளோம்.
நாம் கடந்த காலங்களிலும் மக்களின் சார்பாகத்தான் இருந்தோம்.
நாம் மக்களை நேசிப்பவர்கள். மக்களுக்காகத்தான் உண்மைகளை பேசினோம்.
இதனால்தான் சிறைச்சாலைக்கு செல்லவும் நேரிட்டது. நாம் யாருக்கும் சொத்துக்களை சேர்க்க வேண்டியத் தேவையும் கிடையாது.
மக்கள் தான் எனது உறவுகள். என்னை பிரபல நடிகராக மாற்றியதும், பிரபல பாடகராக மாற்றியதும் இந்த மக்கள் தான். அதேபோல, பிரபல அரசியல்வாதியாக்கியதும்கூட இந்த மக்கள் தான். எனவே, இந்த மக்கள் சார்பாக தொடர்ந்தும் நாம் செயற்படுவோம்” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.