அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் கடந்த 14 ஆம் திகதி முதலை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.
சொறிக் கல்முனை பகுதியைச் சேர்ந்த 58 வயதான திருமணமாகாத பெண்ணே, இவ்வாறு முதலையால் தாக்கப்பட்டிருந்தார்.
எனினும், தாக்குதலுக்கு உள்ளான அப் பெண்ணோ அல்லது அவரது சடலமோ இதுவரை காணப்படாத நிலையில், முதலை இழுத்துச் சென்றிருக்கலாம் என்று பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து அவரது சடலத்தை தேடும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
சவளக்கடை பொலிஸாருடன் இணைந்து கல்முனை கடற்படையினரும், சுழியோடிகளும் இணைந்து, குறித்த பணியை மேற்கொண்டு வருவதோடு, இதற்கு பிரதேச பொது மக்களும் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.
இந்த அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பிரதேசங்களில் முதலைகளில் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால், மக்கள் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.
காரைதீவு – மாவடிப்பள்ளி நீர் ஓடையில் வழமையாகவே முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், மழை வெள்ளம் காரணமாக இவற்றிடன் நடமாட்டம் மேலும் அதிகரித்துள்ளதாக அப்பிரதேச வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், தினந்தோறும் தங்களின் கால்நடைகள் உயிரிழப்பதாகவும், அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ள அபாயகரமான பிரதேசங்களில், பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்த வேண்டும் என பொது மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும், உரிய வகையில் இதனை அதிகாரிகள் செயற்படுத்தவில்லை என்பதே பொது மக்களின் ஆதங்கமாக இருக்கிறது.
இந்த அசமந்தப் போக்கினால், இன்று ஒரு உயிர் இல்லாது போயுள்ளமையே கவலைக்குரிய விடயமாகும்.
எனவே, அதிகாரிகள் இந்த விடயத்தின் தீவிரத் தன்மையை உணர்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.