புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணுக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தனது குடும்பத்தினருடன் புதுச்சேரிக்கு வந்திருந்தார். பின்னர் தான் திருமணம் செய்யப்போகும் இளம்பெண்ணுடன் இந்திரா காந்தி சதுக்கம் அருகே உள்ள ஆடை கடைக்கு தீபாவளி பண்டிகைக்காக ஆடை எடுக்க சென்றுள்ளார்.
இந்நிலையில் கடையில் ஆடைகளை தேர்வு செய்து கொண்டிருந்த போது அந்த இளம் பெண் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகு நேரம் ஆகியும் திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடை முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் புதுப்பெண்ணை காணவில்லை.
பின்னர் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது புதுப்பெண் கடையில் இருந்து மற்றொரு வாலிபருடன் சேர்ந்து வெளியே செல்வது தெரியவந்தது.
இதையடுத்து விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் திருமணம் நிச்சயித்த இளம்பெண்ணின் காதலன் என்பது தெரியவந்தது.
அந்த இளம் பெண் படிக்கும்போதே புதுச்சேரி சோரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
தற்போது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விட்டதால் தந்திரமாக முன்கூட்டியே தெரிவித்து காதலனை கடைக்கு வரவழைத்து அந்த வாலிபருடன் ஓட்டம்பிடித்தது தெரியவந்தது.
இதுகுறித்து ரெட்டியார் பாளையம் போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.