ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில், கொழும்பில் இன்று அந்தக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டிருந்த அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ரவி குமுதேஷ், ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க மீது சேறுபூசுவதாலோ, அவரை காலால் இழுப்பதாலோ அவரது அரசியல் வருகையை எவராலும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
இது குறித்து ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஐக்கிய ஜனநாயகக் குரல் என்ற எமது கட்சியானது, புதிதாக சிந்திக்கும் ஒரு கட்சியாகும். எமது சிந்தனை மக்களிடத்தில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது.
நாம் நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக பலமானதொரு எதிர்க்கட்சியாக அமர்வதற்கே எதிர்ப்பார்த்துள்ளோம். எதிர்க்கட்சியாக இருந்தாலும், அரசாங்கம் செய்தும் அனைத்து விடயங்களுக்கும் எதிர்ப்பினை வெளியிட்டு, வழமையாக எதிர்க்கட்சிகள் செய்யும் செயற்பாட்டை ஒருபோதும் நாம் செய்ய மாட்டோம்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாட்டை முன்னேற்ற பாடுபட வேண்டும்.
இதற்கு சரியான நபர்களை மக்கள் தங்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றுக்கு அனுப்ப வேண்டும்.
இதனை செய்யாமல், அரசியல் கலாசாரத்தை பிழை என்று விமர்சிப்பதால் பலனில்லை.
எமது தலைவர் ரஞ்சன் ராமநாயக்கவின் அரசியல் மீள் வருகைக்கு அஞ்சியே அவரது வேட்புமனுவை நிராகரிக்குமாறு கோரி, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அவர் மீது சேறுபூசுவதாலோ, அவரைக் காலால் இழுப்பதாலோ அவரை எமது கட்சியின் தலைவர் பதவியிலிருந்து எவராலும் நீக்கிவிட முடியாது” இவ்வாறு ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.