தேர்தலில் வெற்றிபெற்று பொதுமக்களின் உண்மையான தேவையறிந்து சேவை செய்வதே தமது நோக்கமாகும் என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் ஊழலை ஒழித்து தூய அரசியலை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும்.
தேர்தலில் பிரதான கட்சிகள் பல போட்டியிடுகின்றன.நான் கடந்த மூன்று சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றில் அங்கம் வகித்துள்ளேன்.நாம் ஊழல்வாதிகளை நன்றாக அடையாளங் கண்டுள்ளோம்.
ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊழல் மோசடியில் ஈடுபடவுமில்லை. அவ்வாறானவர்களுடன் தொடர்புபடவும் இல்லை.
நாடாளுமன்றில் எப்போதும் உண்மையை பேசினேன்.தற்போது புதிய அரசியல் கட்சியூடாக தேர்தலில் போட்டியிடுகின்றோம். ஏனெனில் நாம் ஊழல்வாதிகளுடன் இணைந்து செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்க விரும்பவில்லை.
எமது கட்சியில் ஊழல்வாதிகள் போதைப்பொருள் மோசடியாளர்கள் இலஞ்சம் பெறுவோர் இல்லை. தேர்தலில் பலர் அரசியல் லாபம் கருதி முன்னிலையாகியுள்ளனர். நாம் சுயலாப நோக்கில் தேர்தலில் முன்னிலையாகவில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.