பிராம்ப்டனில் உள்ள இந்து ஆலயத்துக்கு வெளியே காலிஸ்தான் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றதற்காக கனேடிய பொலிஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
CBC செய்திச் சேவையின் அறிக்கையின் படி, இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பீல் பிராந்திய காவல்துறையைச் சேர்ந்த ஹரிந்தர் சோஹி (Harinder Sohi) ஆவர்.
போராட்டத்தின் போது, அவர் காலிஸ்தான் கொடியை ஏந்தியிருப்பதையும் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்புவதையும் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை (03) காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பிராம்ப்டனில் அமைந்துள்ள இந்து ஆலயத்தின் மீதும் அங்கிருந்த பக்தர்கள் மீதும் வன்முறைத் தாக்குதல் நடத்தினர்.
அவர்கள் ஆலயத்துக்கு வெளியே மக்களுடன் வன்முறையில் ஈடுபட்டதுடன், இந்திய அதிகாரிகளின் பாதுகாப்பையும் அச்சுறுத்தினர்.
இதனால், இந்தியா-கனடா உறவுகள் மேலும் பின்னடைவைச் சந்தித்தன.
இந்த நிலையில், இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நமது தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் கோழைத்தனமான முயற்சிகளும் அதே பயங்கரமானவை. இதுபோன்ற வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது.
கனேடிய அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினார்.
கனேடிய மண்ணில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படும் இந்திய-விரோத காலிஸ்தானியர்களுக்கு ஒட்டாவா ஆதரவளிப்பதாகக் கூறப்படுவதால், இந்தியாவும் கனடாவும் இப்போது பல வாரங்களாக தீவிர இராஜதந்திர மோதலில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.