கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஐசிசி ஆடவர் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதல் 20 இடங்களில் இருந்து விராட் கோலி வெளியேறினார்.
அண்மையில் முடிவடைந்த இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதனால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 3-0 என்ற கணக்கில் முதல் தோல்வியை இந்தியா சந்தித்தது.
நியூஸிலாந்துடனான தொடருக்கு முன்னதாக தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருந்த விராட் கோலி தற்சமயம் 22 ஆவது இடத்தில் உள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் கோலி, இரண்டு இடங்கள் சரிந்து எட்டாவது இடத்தைப் பிடித்தார், 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர், 5 இடங்கள் சரிந்து 13 ஆவது இடத்துக்கு சென்றார், மூன்றாவது இற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்கு பின்னர் ஒன்பது இடங்கள் சரிந்து 22 ஆவது இடத்துக்கு சென்றார்.
நியூஸிலாந்துடனான தொடரில் முன்னாள் இந்திய தலைவர் ஆறு இன்னிங்ஸுகளில் ஒரு அரை சதத்துடன் 15.50 சராசரியில் 93 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார்.
இது சொந்த டெஸ்ட் தொடரில் அவரது மோசமான செயல்பாடுகளில் ஒன்றாகும்.
செவ்வாய்க்கிழமை (6) தனது 36 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய கோலி, இறுதியாக 2014 டிசம்பரில் ஐசிசியின் முதல் 20 டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் இருந்து வெளியேறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு கடினமான சுற்றுப் பயணத்தை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டது.
இங்கிலாந்துடனான ஐந்து போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் கோலி, 13.4 சராசரியுடன் 134 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தார்.
தற்சமயம் ஐசிசி ஆடவர் டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள இந்திய வீரர்கள் ரிஷப் பந்த் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே உள்ளனர்.