இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது இன்று தம்புள்ளை, ரங்கிரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டியானது இன்று பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகும்.
முன்னதாக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரானது 1:1 என்ற கணக்கில் சமனிலையில் முடிந்த நிலையில், இரு அணிகளும் ஒருநாள் தொடரில் தங்களின் பலத்தை வெளிப்படுத்த இன்று ஒன்றுடன் ஒன்று முட்டி மோதுகின்றன.
நியூசிலாந்து எதிர்வரும் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தங்கள் அணியை தயார்படுத்துவதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த ஆட்டத்தை பார்க்கிறது.
அதேநேரம் 2023 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் ஒன்பதாவது இடத்தை பிடித்த இலங்கை, எட்டு அணிகள் பங்கெடுக்கும் சாம்பியன் டிராபியில் விளையாடும் தகுதியை இழந்து நிலையில் இந்த ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
2023 டிசம்பரில் இருந்து நியூசிலாந்து, பங்களாதேஷை சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை எதிர்கொண்டதில் இருந்து இதுவரை ஒருநாள் போடிகளில் விளையாடவில்லை.
அதேநேரம், புதிய பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யாவின் கீழ் பல போட்டிகளை விளையாடியுள்ள இலங்கை தற்சமயம் நல்ல நிலைக்கு வந்துள்ளது. சனத்தின் தலைமையிலான ஐந்து தொடர்களில் விளையாடியுள்ள இலங்கை நான்கில் வெற்றி பெற்றுள்ளது.
இதனிடையே, இரண்டாவது டி20 போட்டியின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக நியூஸிலாந்து வீரர் லாக்கி பெர்குசனும், இலங்கை நட்சத்திரம் வனிந்து ஹசரங்கவும் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இதுவரை இவ்விரு அணிகளும் மொத்தம் 102 போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
அதில் இலங்கை, 41 வெற்றிகளையும், நியூஸிலாந்து 52 வெற்றிகளையும் பெற்றுள்ளது, ஒரு போட்டி சமனிலையிலும், எட்டு போட்டிகள் எதுவித முடிவின்றியும் கைவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.