பேர்த்தில் நடந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் 534 என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா, அவுஸ்திரேலியாவை 238 ஓட்டங்களுக்குள் சுருட்டி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்த வெற்றிக்குப் பின்னர் இந்தியா 61.11 சதவீத புள்ளிகளுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.
கடந்த நவம்பர் 22 ஆம் திகதி ஆரம்பமான போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியும், இந்திய அணித் தலைவர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் திக்குமுக்காடி 104 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இதனால், 46 ஓட்டத்துடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் 6 விக்கெட் இழப்புக்கு 487 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், விராட் கோலியின் சதத்துடன் இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேயர் செய்தது.
பின்னர் 534 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி இரண்டவது இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலியா போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் 3 விக்கெட்டுகளுக்கு 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
நான்காம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க அவுஸ்திரேலிய அணி மொத்தமாக 238 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அணித் தலைவர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், வொஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பங்காற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இரு இன்னிங்ஸுகளில் மொத்தமாக 08 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா தெரிவானார்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 06 ஆம் திகதி அடிலெய்ட்டில் ஆரம்பமாகும்.