கலா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, நொச்சியாகம, ராஜாங்கனை, வனாத்தவில்லுவ, கருவலகஸ் ஏரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த தாழ்நில மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், வினாடிக்கு பத்தாயிரம் கன அடி நீர் கொள்ளளவு கலா ஓயாவிற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
அங்கமுவ நீர்த்தேக்கத்திலும் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், கலா ஓயாவிற்கு வினாடிக்கு 3650 கன அடி நீர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலையினால் 17 மாவட்டங்களில் 59,629 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூற்று என்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் 34,885 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து இருபத்து மூவாயிரத்து எண்ணூற்று எழுபத்தாறு பேர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை, அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் ஒலுவில் – கழிஓடை பகுதியில் பாலம் ஒன்று மூழ்கியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாலம் மூழ்கியுள்ளதாக அப்பகுதியிலுள்ள எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் மூன்று அடி தண்ணீர் தேங்கியிருப்பதால், மட்டக்களப்பு நகருக்கு செல்வது தடைப்பட்டுள்ளது. மேலும், மட்டக்களப்பு நகரம் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், கலாஓயாவின் வான் கதவுகள் தலா ஒரு அடி திறக்கப்பட்டுள்ளன. பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக கலாஓயா 85500 ஏக்கர் அடி நீர் கொள்ளளவை எட்டியுள்ளதுடன் நேற்று காலை 10 மணியளவில் கலாஓயா குளம் நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ளது.
இதனையடுத்து கலாஓயாவின் அவசர வான் கதவுகள் இரண்டையும் 10 அடி வரை திறக்க கலாஓயாவுக்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வினாடிக்கு 10420 கன அடி நீர் கொள்ளளவு கலா ஓயாவிற்கு திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.