சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐசிசி) நாளை வெள்ளிக்கிழமை (29) ஒரு மெய்நிகர் கூட்டத்தை நடத்தவுள்ளது.
இதன்போது, 2025 சாம்பியன்ஸ் டிராபி குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
இதன்போது, போட்டிகள் திட்டமிட்டபடி பாகிஸ்தானில் நடைபெறுமா அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
ESPNcricinfo படி, ஐசிசி போட்டிகள் தொடர்பில் இறுதி முடிவை எடுப்பதற்கு முன், இக் கூட்டத்தின் போது உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த கூட்டத்தின் போது, பாகிஸ்தானில் மாத்திரம் போட்டிகள் நடத்தப்படுமா அல்லது ஹைபிரிட் (கலப்பின) முமையின் கீழ் நடத்தப்படுமா என்பது குறித்து விவாதிக்கப்படும்.
போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி 19 முதல் மார்ச் வரை நடைபெற உள்ளது, ஆனால் ஐசிசி இன்னும் அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிடவில்லை.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பமாகும் சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (பிசிபி) எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத்தில் பங்கேற்ற பின்னர், இரு நாடுகளுக்கு இடையிலும் அரசியல் உறவில் விரிசல் ஏற்பட்டதால், பாகிஸ்தானுக்கு இந்தியா சுற்றுப்பயணம் செய்யவில்லை.
அதேநேரம், பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி, 2025 சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானுக்குச் செல்வதில்லை என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அண்மையில் இந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன் இந்திய அரசாங்கம் அனுமதித்தால் மட்டுமே அணி பாகிஸ்தானுக்குச் செல்லும் என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு ஆசிய கிண்ணத்தை ஹைபிரிட் முறையில் பாகிஸ்தான் நடத்தியது.
இதன்போது இந்தியாவின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் விளையாடப்பட்டன, மீதமுள்ள போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.