சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 20,534 குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சத்து 1,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்களில் சிக்குண்டு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமற் போயுள்ளார் எனவும், 18 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் 102 வீடுகள் முழுமையாகவும் 1,952 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள 28,324 குடும்பங்களைச் சேர்ந்த 94,134 பேர் உறவினர் வீடுகளிலும், 11,663 குடும்பங்களைச் சேர்ந்த 36,303 பேர் 345 தங்குமிடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அம்பாறை மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 43,631 குடும்பங்களைச் சேர்ந்த 149,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.