நாட்டில் இன்றைய தினத்தின் பின்னர் மழையுடனான காலநிலை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மேகமூட்டத்துடனான வானிலை பதிவாகக் கூடும்.
வடமாகாணத்தின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையே மழைவீழ்ச்சி பதிவாகக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.
வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் புத்தளம் முதல் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களுக்கு மறுஅறிவித்தல் வரை செல்ல வேண்டாம் எனக் கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 24 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதனால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய அறிக்கைக்கு அமைய, அனர்த்தங்களால் 20 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் காணாமல் போயுள்ள ஒருவர் தொடர்ந்தும் தேடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 191 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 63 ஆயிரத்து 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், 101 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் 2 ஆயிரத்து 576 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
9 ஆயிரத்து 744 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 80 பேர் தங்களுடைய இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் 280 தற்காலிக முகாம்களில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளைக் கடற்படையினர் இன்றைய தினமும் முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வட மாகாணத்தின் நெடுந்தீவு, வல்வெட்டித்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏலவே அனுப்பப்பட்டிருந்த கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் விமானப் படையின் பெல் 212 ரக உலங்கு வானூர்தியின் உதவியுடன் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சு நேற்று கொண்டு வரப்பட்டது.
இதேவேளை, தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் 9 மாவட்டங்களுக்கு விடுத்துள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.