கட்சி, இனம், மதம், வர்க்கம் மற்றும் உண்டான ஏனைய பேதங்களைப் பொருட்படுத்தாமல் பாலஸ்தீன மக்களின் நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் ஒரு நாடாக ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டுத் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மனிதநேயத்தின் பெயரால் அவர்களுக்கு நீதி கிட்ட வேண்டும். இதன் பொருட்டு சர்வதேசச் சமூகத்துடன் கைகோர்த்துச் செயற்பட வேண்டும்.
பேச்சுக்களோடும், அறிக்கைகளோடும் சுருங்கி விடாது, பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாமனைவரும் முன்நிற்க வேண்டும்.
பாலஸ்தீனத்தை இல்லாதொழிக்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்துடன் ஒன்றாக இணைந்து எமது ஆதரவை வெளிப்படுத்துகிறோம்.ஒரு நிலைப்பாட்டிலிருந்து கொண்டு பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்க வேண்டும்.
இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது, அந்த மக்கள் வாழும் இடங்களில் குண்டுவீச்சுக்கு எதிராக உலகத் தலைவர்கள் குரல் எழுப்ப வேண்டும்.
இதனை வெறும் பேச்சோடு சுருக்கிக் கொள்ளாது செயலில் காட்ட வேண்டும். பேச்சுக்களில் இருப்பது செயலிலும் இருக்க வேண்டும்.
இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழும் யுகத்தை உருவாக்க அனைவரும் அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.