சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் இன்று (03) காலை ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் இதுவரை அரங்கேறிய முக்கிய விடயங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2024 செப்டெம்பர் 11 ஆம் திகதி “வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தம்)” எனும் சட்டமூலத்திலும், 2024 செப்டெம்பர் 13ஆம் திகதி “வெளிநாட்டு தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்தல்” மற்றும் “குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)” ஆகிய சட்டமூலங்களிலும் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகரினால் சான்றுரை எழுதப்பட்டிருப்பதாக சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல இன்று (03) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
🔸 பத்தாவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியின் முதற்கோலாசானாகப் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நியமனம்
பத்தாவது நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சியின் முதற்கோலாசானாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல சபையில் அறிவித்தார்.
🔸 தவிசாளர் குழாத்திற்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 143 இன் பிரகாரம் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்கான தவிசாளர் குழாத்திற்கு உள்ளடக்குவதற்கு கௌரவ லக்ஸ்மன் நிபுண ஆரச்சி, இம்ரான் மகரூப், திருமதி, ரோஹினீ குமாரி விஜேரத்ன, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், (கலாநிதி) (செல்வி) கெளஷல்யா ஆரியரத்ன, (சிரேஷ்ட பேராசிரியர்) சேன நாணாயக்கார, சானக மாதுகொட, சஞ்ஜீவ ரணசிங்ஹ, அரவிந்த செனரத், கௌரவ கிட்ணன் செல்வராஜ் ஆகியோர் தன்னால் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாக சபாநாயகர் இன்று (03) சபையில் அறிவித்தார்.
🔸 முகம்மது சாலி நழீம் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம்
கௌரவ முகம்மது சாலி நழீம், பத்தாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல முன்னிலையில் இன்று (03) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் உறுப்பினராக முகம்மது சாலி நழீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 21 ஆம் திகதி பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றதுடன், அன்றைய தினம் புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்தனர். அதுவரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கான பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
கடந்த 22 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் தேசியப்பட்டியல் உறுப்பினராக கௌரவ முகம்மது சாலி நழீம் அவர்களின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டது.
அதற்கமைய அவர் இன்று பத்தாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதற்கு முன்னர் அவர் ஏறாவூர் நகர சபையின் தவிசாளராகப் பணியாற்றியுள்ளார்.