அவுஸ்திரேலிய நகரமான மெல்போர்னில் வெள்ளிக்கிழமை (06) அதிகாலையில் முகமூடி அணிந்த விசமிகள், அங்கு அமைந்துள்ள யூத தேவாலயத்துக்கு தீ வைத்துள்ளனர்.
இது நாடு முழுவதும் பரவலான கண்டனத்தைத் தூண்டியது.
அடாஸ் இஸ்ரேல் ஜெப ஆலயத்தில் அந் நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 4:10 மணிக்கு (1710 GMT) சில பக்தர்கள் உள்ளே இருந்தபோது தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், தென்கிழக்கு மெல்போர்ன் புறநகர் ரிப்போன்லியாவில் உள்ள கட்டிடத்தின் பெரும்பகுதி எரிந்து தீக்கிரையாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால், எவருக்கும் கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அவுஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புக்கு இடமில்லை என்றார்.
அதேநேரம், ஒரு வழிபாட்டுத் தலத்தில் இந்த வன்முறை, அச்சுறுத்தல் என்பது மூர்க்கத்தனமானது. இந்த தாக்குதல் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது மற்றும் சமூகத்தில் அச்சத்தை உருவாக்குவதை தெளிவாக நோக்கமாகக் கொண்டுள்ளதும் அவர் குறிப்பிட்டார்.
விக்டோரியா மாநில காவல்துறையும் பயங்கரவாத எதிர்ப்பு பொலிசாரும் கூட்டிணைந்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.