அவுஸ்திரேலியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றிக்கு உத்வேகம் அளித்த பாகிஸ்தான் நட்சத்திரம் ஹாரிஸ் ரவூப் (Haris Rauf) 2024 நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சனுடனான பலத்த போட்டிக்கு மத்தியில் அவர் இந்த விருதினை வென்றுள்ளார்.
மூன்று ஒருநாள் போட்டிகளின் போது 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, 22 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் வெல்வதற்கு வழி அமைத்தார்.
ரவூஃப் ஒட்டுமொத்தமாக நவம்பர் மாதத்தில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 31 வயதான இவரின் சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது.
அடிலெய்டில் நடந்த இந்தப் போட்டியின் போது அவர் 29 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் அணிக்காக தனது இரண்டாவது ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவூப்பின் பந்து வீச்சினால், வெறும் 163 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலியா சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால், அப் போட்டியில் பாகிஸ்தான் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தீர்க்கமான மூன்றாவது ஒருநாள் போட்டியில், வலது கை வேகப்பந்து வீச்சாளர் மேலும் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியதுடன், ரவூஃப் தொடரின் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது தவிர அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் அவர் மொத்தமாக ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.