முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைக்காக இன்றையதினம் (12) எடுத்துக்கொள்ளப்பட்டது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற இவ் வழக்கு விசாரணையில் காணாமற்போனோர் அலுவலகம் (Office on Missing Persons) சார்பில் அலுவலகத்தின் சட்டத்தரணி, OMP அலுவலகத்தின் கிளிநொச்சி , முல்லைத்தீவு பிராந்திய இணைப்பாளர் கிருஷாந்தி ரத்நாயக்க, சட்ட வைத்திய அதிகாரி சார்பாக மருத்துவ அதிகாரி, மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கணபதிப்பிள்ளை கணேஸ்வரன், அனித்தா சிவனேஸ்வரன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன் போது சட்ட வைத்திய அதிகாரி சார்பாக இன்றையதினம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்றும் இன்னும் இரண்டு மாத கால அவகாசம் வேண்டும் என்றும் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சட்ட அதிகாரியின் விண்ணப்பத்தினை ஏற்ற மன்று, குறித்த வழக்கினை மீண்டும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.