இந்தியாவின் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் நவம்பரில் 5.48% ஆகவும், ஒக்டோபரில் 6.21% ஆகவும் இருந்ததாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சின் (MoSPI) தரவுகள் தெரிவிக்கின்றன.
காய்கறிகளின் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் நெற் பயிர் விதைப்பு முன்னேற்றம் ஆகியவை எதிர்பார்த்த குறைவுக்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சில துறைகளில் நிவாரணம் இருந்தபோதிலும், உயர்ந்த காய்கறி மற்றும் உணவு விலைகள் தொடர்ந்து மூன்றாவது மாதமாக பணவீக்கத்தை 5% க்கு மேல் வைத்திருக்கின்றன.
அதேநேரம், உணவுப் பொருட்களின் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 9.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது அக்டோபரில் 10.87 சதவீதமாகவும், 2023 நவம்பரில் 8.70 சதவீதமாகவும் இருந்தது.
இதேவேளை, கடந்த வாரம், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, நடப்பு நிதியாண்டிற்கான அதன் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 7.2% இலிருந்து 6.6% ஆகக் குறைத்தது, அதே நேரத்தில் அதன் பணவீக்கக் கணிப்பை 4.5% இலிருந்து 4.8% ஆக உயர்த்தியது.
நீடித்து வரும் உணவுப் பொருட்களின் விலை அழுத்தங்கள் டிசம்பர் காலாண்டில் பணவீக்கத்தை உயர்த்தக்கூடும் என்றும் அது கூறியது.
நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அடிப்படையிலான மொத்தப் பணவீக்கம் 2024 ஜூலை-ஆகஸ்ட் காலத்தில் சராசரியாக 3.6 சதவீதத்திலிருந்து செப்டம்பர் மாதத்தில் 5.5 சதவீதமாகவும், ஒக்டோபர் 6.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.