புஷ்பா 2: தி ரூல் திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் பொலிஸார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரையிடலின் போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன் தற்சமயம், சிக்கடப்பள்ளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் 5 அன்று புஷ்பா 2 திரையிடலுக்கு அல்லு அர்ஜுன் வரவிருந்தது குறித்து தெலுங்கானா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருவது முன்னதாகவே தெரிந்திருந்தால் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு ஏற்பட்ட உயிரிழப்பினை தவிர்த்திருக்க முடியும் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிசம்பர் 4 அன்று சந்தியா திரையரங்கில் நடிகரைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியபோது இந்தச் சம்பவம் நடந்தது.
நெரிசலில் சிக்கய 39 வயதான ரேவதி என்ற பெண் மூச்சுத்திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார், அதே நேரத்தில் அவரது எட்டு வயது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பெண்ணின் குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழுவினர் மற்றும் திரையரங்க நிர்வாகம் மீது பொலிஸார் டிசம்பர் 5 ஆம் திகதி வழக்குப் பதிவு செய்தனர்.
இதேவேளை, தனது புஷ்பா 2: தி ரூல் இன் ஹைதராபாத் திரையரங்களின் முதல் காட்சியின் போது ஒரு பெண் இறந்தது தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக் கோரி, டிசம்பர் 12 அன்று அல்லு அர்ஜுன் தெலுங்கானா மேல் நீதிமன்றத்தை அணுகியமையும் குறிப்பிடத்தக்கது.