மட்டக்களப்பு, தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டமை வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது ” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக்கல்லூரியின் முன்னால் புத்தர்சிலை நிறுவப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்னால் புத்தர் சிலையொன்று திடீரென்று நிறுவப்பட்டுள்ளது. தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.
அந்தவகையில் வைத்தியசாலை நிருவாகத்திற்குத் தெரியாமல் அவர்களது அனுமதியைப் பெறாமல் ஒரு புத்தர் சிலையை வைத்திருப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத கண்டனத்துக்குரிய விடயமாகும்.
புதிதாக இந்த நாட்டில் உருவாகியிருக்கின்ற அரசாங்கம் சாதி, மத, இன பேதமற்ற ஒரு இலங்கையை உருவாக்கவேண்டும் என்ற கோசத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கின்றார்கள். இவர்களும் தொடர்ச்சியாக இப்படி தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்களா?, அல்லது அரசாங்கத்திற்கு ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டும் என்ற தோரணையில் இந்த தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் செயற்படுகின்றாரா? என்ற கேள்விக்குறி எங்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.
எது எவ்வாறாயினும் வட கிழக்குப் பிரதேசம் என்பது தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் கணிசமாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் மட்டக்களப்பு போதனா வைத்தியாசலைக்குள் அனுமதியின்றி ஒரு புத்தர் சிலையை நிறுவியிருப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
வைத்தியசாலை நிருவாகம் உடனடியாக இவ்விடயத்தில் தலையிட்டு அங்கிருக்கும் பதற்ற நிலைமையை தவிர்ப்பது மாத்திரமல்லாமல் இந்த மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாகக் கூடுதலான கரிசனையை எடுத்து அங்கு ஏற்படவிருக்கும் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் ” இவ்வாறு கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.