சனிக்கிழமையன்று பிரான்சின் இந்தியப் பெருங்கடல் பகுதியான மயோட்டியைத் (Mayotte) தாக்கிய சூறாவளியில் பல நூறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அப் பகுதிக்கான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சிடோ சூறாவளி மணிக்கு 225 கிலோ மீற்றர் வேகத்தில் கடந்து சென்றதுடன், மயோட்டியை முழுவதுமாக தரைமட்டமாக்கியது.
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டில் மடகாஸ்கருக்கு வடக்கே பிரெஞ்சு இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தைத் தாக்கிய மிகத் தீவிரமான புயலாக மயோட்டி மீது சூறாவளி வீசியதாக பிரான்ஸ் வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது.
பிரெஞ்சு உள்துறை அமைச்சர் புருனோ ரீடெய்லியோ குறைந்தது 11 பேர் சூறாவளி தாக்கம் காரணமாக உயிரிழந்ததாக ஆரம்பத்தில் -கூறினார்.
பின்னர், இறப்பு எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக மயோட் அதிகாரிகளின் தகவல்களை மேற்கொள்ளிட்டு AFP செய்திச் சேவை கூறியுள்ளது.
ஆனால் உள்ளூர் ஊடகங்களுடன் பேசிய தீவின் அரசியற் தலைவர் Francois-Xavier Bieuville, சூறாவளி தாக்கத்தினால் மயோட்டி முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று கூறினார்.
இதனிடையே, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மாயோட் மக்களுக்கு பிரான்ஸ் “உடன் இருக்கும்” என்றும் 250 மீட்புப் பணியாளர்களை அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மடகாஸ்கரின் வடமேற்கில் அமைந்துள்ள மயோட் ஒரு முக்கிய தீவு, கிராண்ட்-டெர்ரே மற்றும் பல சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும்.
தீவின் 300,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் உலோக தகரங்களைக் கொண்ட கூரைகளையுடைய குடிசைகளில் வாழ்கின்றனர்.
இந்த நிலையில் சூறாவளி தாக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
மின்சாரம், தண்ணீர் மற்றும் இணைய இணைப்புகள் அனைத்தும் முடங்கியுள்ளன.
பாரிஸில் உள்ள அரசாங்கம் பொருட்கள் மற்றும் அவசரகால பணியாளர்களுடன் ஒரு இராணுவ போக்குவரத்து விமானத்தை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமை (14) காலை சூறாவளி முழு பலத்துடன் தாக்குவதற்கு முன்பே, மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாகவும், கட்டிடங்களின் கூரைகள் தூக்கி ஏறியப்பட்டதாகவும், மின் கம்பிகள் சாய்ந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
1934 ஆம் ஆண்டிலிருந்து தீவு இதுபோன்ற கடுமையான அனர்த்த நிலைமையை சந்தித்ததில்லை என்று உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.