பங்களாதேஷ் காபந்து அரசாங்கம் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொதுத் தேர்தலை நடத்தும் என்று இடைக்காலத் தலைவர் மொஹமட் யூனுஸ் (Muhammad Yunus) திங்கள்கிழமை (16) அறிவித்தார்.
துல்லியமான வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்காக குறைந்தபட்ச சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால், 2025 இன் பிற்பகுதியில் தேர்தல்கள் சாத்தியமாகும்.
எனினும், தேர்தல் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் தேசிய ஒருமித்த கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் விரிவான சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டால், தேர்தலுக்கு கூடுதலாக ஆறு மாதங்கள் தேவைப்படலாம் என்றும் அவர் கூறினார்.
1971 இல் பங்களாதேஷ் உருவாவதற்கு வழிவகுத்த இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் தோற்கடிக்கப்பட்ட வெற்றி தினத்தைக் குறிக்கும் வகையில் தொலைக்காட்சி உரையில் உரையாற்றும் போது 84 வயதான தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
முன்னாள் பிரதமரும், அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவர்களால் நடத்தப்பட்ட கிளர்ச்சியில் வெளியேற்றப்பட்டார்.
சிவில் சேவை வேலைகளில் ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரின் அரண்மனைக்குள் நுழைந்ததை அடுத்து, 77 வயதான அவர் அண்டை நாடான இந்தியாவுக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றார்.
இதையடுத்து காபந்து அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் யூனுஸ், நாட்டின் தலைமை ஆலோசகரை நியமிக்க நிறைய அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.