எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நடைமுறைக்கு வரவிருந்த மிகவும் சர்ச்சைக்குரிய “ஹிஜாப் மற்றும் கற்பு சட்டம்” அமலாக்கத்தை ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) இடைநிறுத்தியுள்ளது.
சட்டத்திற்கு எதிராக உள்நாட்டு, சர்வதேச கண்டனங்கள் மற்றும் விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த திடீர் இடைநிறுத்தம் வந்துள்ளது.
சட்டம் தெளிவற்ற நிலையில் உள்ளதாக கூறியுள்ள ஈரானிய ஜனாதிபதி சூத் பெசெஸ்கியன் (Masoud Pezeshkian), அதை நடைமுறைப்படுத்துவதற்கு சீர்திருத்தம் அவசியம் என்றும் விவரித்தார்.
இதன் விளைவாக குறித்த சட்டமூலம் மறுபரிசீலனைக்கு உட்படவுள்ளது.
பொது வெளியில் தலைமுடி, முன்கைகள் அல்லது கீழ் கால்களை முழுமையாக மறைக்கத் தவறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அபராதம், 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை குறித்த சட்டமானது முன்மொழிந்தது.
அதேநேரம், இது மனித உரிமை ஆர்வலர்களால் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது.
பல தசாப்தங்களாக ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆட்சியாளர்களால் தேசிய பாதுகாப்பு முன்னுரிமையாகக் கருதப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு விதிக்கப்பட்ட கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் முன்பு எதிர்ப்புகளைத் தூண்டின.
புதிய சட்டத்தின் கீழ் அந்த கட்டுப்பாடுகளானது மேலும் இறுக்கம்மாக்கப்படுவதுடன், அதனை மீறும் நபர்களுக்கு எதிராக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராத விதிப்பினையும் கட்டாயப்படுத்தும்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ஹிஜாப் விவகாரத்தில் ஈரானியப் பெண்களை நடத்துவதை அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான பெஜேஷ்கியன் வெளிப்படையாக விமர்சித்தார்.
ஹிஜாப் விவகாரத்தில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.
2022 ஆம் ஆண்டிலிருந்து ஈரானில் ஹிஜாபைச் சுற்றியுள்ள பதட்டங்கள் அதிகமாகவே உள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில், பல இளம் ஈரானியப் பெண்கள், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில், பொது இடங்களில் தங்கள் ஹிஜாப்களை மீறி அகற்றியுள்ளனர்.
ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நெருக்கமான கடும்போக்கு பிரிவுகளின் அழுத்தம் இருந்தபோதிலும், கடந்த வாரம், 300 க்கும் மேற்பட்ட ஈரானிய உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் புதிய ஹிஜாப் சட்டத்தை “சட்டவிரோதமானது மற்றும் செயல்படுத்த முடியாதது” என்று பகிரங்கமாக கண்டித்தனர்.
மேலும், ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளை மதிக்குமாறும் பெசேஷ்கியனை வலியுறுத்தியுள்ளனர்.