கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தேசிய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தலைவராக சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்டனர் (Mitchell Santner) நியமிக்கப்பட்டுள்ளார்.
வில்லியம்சன் பல ஆண்டுகளாக மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக பணியாற்றியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் அவர், ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்துடன், ஒயிட்-போல் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், இந்த மாத இறுதியில் தொடங்கும் இலங்கைக்கு எதிரான நியூசிலாந்தின் ஒயிட்-பால் தொடருக்கு முன்னதாக, தலைவர் பொறுப்புக்கு இடது கை வீரர் மிட்செல் சான்டனரின் நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்திற்காக 243 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சான்ட்னர், வில்லியம்சனிடம் இருந்து தலைமை பொறுப்பை ஏற்பதும், முன்னோக்கி செல்வதும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
டிசம்பர் 23 முதல் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக ஆறு ஒயிட்-போல் போட்டிகளுக்கு நியூஸிலாந்து அணியை வழி நடத்துவதே சான்ட்னரின் முதல் பணியாகும்.
அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நிகழ்வுக்கு முன்னதாக 2025 பெப்ரவரியில் பாகிஸ்தானில் ஒரு நாள் போட்டித் தொடரிலும் அவர் அணியை வழி நடத்துவார்.