நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு பல வருடங்களின் பின்னர், தடைகள் தளர்த்தப்பட்டு முதல் தொகுதி வாகனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
சுற்றுலாவிற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில் டொயோட்டா லங்கா நிறுவனம் அந்த வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது.
டொயோட்டா லங்கா தனியார் நிறுவனம் இதுவரை பஸ்கள் மற்றும் வேன்கள் உட்பட 26 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது.
இதேவேளை, எதிர்காலத்தில் ஜனாதிபதியை சந்தித்து வாகன இறக்குமதி தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மூன்று கட்டங்களில் வாகன சந்தையை திறந்து விட திட்டமிட்டுள்ளதாக தெளிவுபடுத்தினார்.
பயணிகள் போக்குவரத்து பஸ் மற்றும் விசேட தேவைகளுக்கு பயன்படுத்தும் வாகனங்கள் என்பவற்றை கடந்த 14 ஆம் திகதி முதல் இறக்குமதி செய்வதற்கு ஏற்ற வகையில் திறந்து விட்டுள்ளோம்.
எதிர்வரும் பெப்ரவரி தொடக்கம் தனியார் வாகன இறக்குமதி குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.
இதனால் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படும் என யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
மத்திய வங்கியுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தி இந்த வாகன இறக்குமதியினால் வெளிச்செல்லும் டொலரின் தொகை தொடர்பில் மதிப்பீடு செய்துள்ளோம்.
அது எந்தளவிற்கு எமது பொருளாதாரத்திற்கு தாங்கக் கூடியதாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளோம்.
எமது பொருளாதாரத்தை மீளமைக்க வேண்டுமானால் இந்த வாகன சந்தையை திறந்து விட வேண்டும்.
அதனால் கடுமையான நிலைப்பாட்டில் இருந்து இந்த வாகன சந்தையை திறந்து விடுகிறோம்.
ஏனென்றால் இது முக்கியமானது என நாம் கருதுவதாகவும் ஜனாதிபதி நடாளுமன்றில் கூறியிருந்தார்.