தற்சமயம் தமது நாடு போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கு நாடுகளுக்கோ தம்மால் அச்சுறுத்தல் ஏற்படாது என்று சிரியாவின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் அஹ்மத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தெரிவித்தார்.
அதேநேரம், சர்வதேச நாடுகள் சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் டமாஸ்கஸில் பிபிசிக்கு அளித்த செவ்வியின் போது அவர் வலியுறுத்தினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் பஷர் அல்-அசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்த மின்னல் தாக்குதலுக்கு ஷரா தலைமை தாங்கினார்.
அவர் கிளர்ச்சிக் கூட்டணியின் மேலாதிக்கக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் (HTS) தலைவர் ஆவார், மேலும் அவர் முன்பு அபு மொஹமட் அல்-ஜோலானியின் பெயரால் அறியப்பட்டார்.
2016 இல் அல்-கொய்தாவின் பிளவுக் குழுவாக பிரிந்ததிலிருந்து ஹயாத் தஹ்ரிர் ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து போன்ற பலவற்றினால் பயங்கரவாத குழுவாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிபிசிக்கு அளித்த செவ்வியில்,
ஹயாத் தஹ்ரிர் பயங்கரவாதக் குழுவல்ல என்று வலியுறுத்திய ஷரா, அதனை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஹயாத் தஹ்ரிர் பொதுமக்களையோ அல்லது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையோ குறிவைக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சிரியாவை ஆப்கானிஸ்தானின் பதிப்பாக மாற்ற விரும்புவதை அவர் மறுத்தார்.
பெண்களுக்கு கல்வியில் நம்பிக்கை இருப்பதாகவும், பல்கலைக்கழகங்களில் பெண்களின் சதவீதம் 60% க்கும் அதிகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், மது அருந்துவது சிரியாவில் அனுமதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது,
பல விடயங்கள் சட்டப் பிரச்சனைகள் என்பதால் அதைப் பற்றி பேச எனக்கு உரிமை இல்லை.
அரசியலமைப்பை எழுதுவதற்கு சிரிய சட்ட நிபுணர்கள் குழு ஒன்று இருக்கும். அவர்கள் முடிவு செய்வார்கள். எந்த ஆட்சியாளரோ அல்லது ஜனாதிபதியோ சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.