சர்வதேச விமானத்தில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டமைக்காக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவர் வியாழனன்று (19) அவுஸ்திரேலியாவின் Broadmeadows நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
புதன்கிழமை (18) இலங்கையில் இருந்து மெல்போர்ன் செல்லும் விமானத்தில் 41 வயதான குறித்த நபர், ஒரு பெண் பயணியிடம் பாலியல் வன்புணர்வு செயலில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறை (AFP) குற்றம் சாட்டியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பயணி, விமான ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார்.
அதன் பின்னர் விமான ஊழியர்கள் அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இந் நிலையில், குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக அவுஸ்திரேலியா விமானப் போக்குவரத்து குற்றவியல் சட்டத்துக்கு அமைய குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
எவ்வாறெனினும், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி அன்று மெல்போர்ன் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.