ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில், ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று (20) காலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இரசாயனம் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று மற்றுமொரு வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளதோடு 40க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த தீ விபத்தில் டேங்கர் லொறிகள் மற்றும் கன்டெய்னர் லொறிகள், பேருந்து, முச்சக்கர வண்டி, கார், மோட்டார் சைக்கிள் என மொத்தம் 37 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தகக்கது.