கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடியது. வழமைபோல குழப்பம். தேர்தல் முடிவுகளில் இருந்து அந்த கட்சி கற்றுக்கொள்ளவில்லை என்பதனை அந்த செயற்குழு கூட்டம் நிரூபித்தது. இது ஒரு புறமிருக்க, அந்தக் கூட்டத்தின் முடிவில் கூட்டத்தில் நடந்தவைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன் கூறிய ஒரு விடயத்தை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.
“கடந்த காலத்தில் அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றது. சில வரைவுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சில வரைவுகளோடு நாங்கள் இணங்கி இருக்கின்றோம். ஆகவே அது எங்களுடைய நிலைப்பாடு….
அதனைத் தொடர்ந்து கோத்தபாய ராஜபக்சவினுடைய காலத்தில் அவர் நியமித்த குழுவுக்கு முன்பாகவும் நாங்கள் சென்று எங்களுடைய நிலைப்பாட்டை எழுத்து மூலமாக கொடுத்திருக்கிறோம். ஆகவே அது எங்கள் கட்சியினுடைய நிலைப்பாடு. ஆகவே அவ்வாறான நிலைப்பாட்டோடு ஒத்து வருகின்றவர்கள் இருந்தால் எந்த ஆட்சேபனையும் கிடையாது…..
ஆனால் வேறு சிலர் எங்களுடைய கட்சிக்கு போட்டியாக வேண்டுமென்றே வெவ்வேறு வரைவுகளை செய்து சில குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.அவ்வாறான குழப்பங்களை அந்த காலப்பகுதியில் செய்தவர்களோடு, அவர்களுடைய வரைவுக்கு இணங்கி செல்ல வேண்டிய அவசியம் நமக்கு கிடையாது….
தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி. வடக்கு கிழக்கில் சகல மாவட்டங்களில் இருந்தும் பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கின்ற ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி. ஆகவே மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி செயல்பட மாட்டோம். மற்றவர்கள் எங்களோடு எங்களுடைய நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” இவ்வாறு சுமந்திரன் தெரிவித்தார்.
அதாவது சுமந்திரன் அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்க முயற்சித்தால் அது தொடர்பான தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டை அங்கே கூற முற்படுகிறார். அதன்படி தானும் பங்காளியாக இருந்து உருவாக்கிய எக்கிய ராஜ்ஜிய என்ற தீர்வுப் பொதியை அவர் கைவிடும் நிலையில் இல்லை.இது முதலாவது விடயம்.இரண்டாவது விடயம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனையாகிய தமிழ் மக்கள் பேரவையின் முன் மொழிவின் அடிப்படையில் புதிய யாப்புருவாக்க முயற்சியை எதிர்கொள்ளும் விடயத்தைப் பற்றியது என்று எடுத்துக் கொள்ளலாம்..
2015 இல் இருந்து 18 வரையிலும் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகளில் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளியாக செயற்பட்டது. அந்த யாப்பு உருவாக்க முயற்சிகளில் சுமந்திரன் தமிழ் தரப்பில் ஒரு தீர்மானிக்கும் சக்தி போல செயல்பட்டார். “எக்கியயராஜ்ஜிய” என்று அழைக்கப்பட்ட அந்தத் தீர்வுப் 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனாவின் யாப்புச் சதி முயற்சியோடு குழம்பி நின்றது. அந்த எக்கிய ராஜ்ய தீர்வு முயற்சிக்காக சேர்ந்து உழைத்தவர்களில் அனுரகுமாரவும் ஒருவர் என்று சுமந்திரன் கூறுவது உண்டு.
இப்பொழுது ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அனுர அரசாங்கம் முன்பு தாங்களும் சேர்ந்து உருவாக்கிய எக்கிய ராஜ்யவை,விட்ட இடத்தில் இருந்து தொடருமாக இருந்தால் அதைத் தமிழ்த் தரப்பு எப்படி எதிர்கொள்வது?
சுதந்திரனும் சம்பந்தரும் எக்கிய ராஜ்யவை ஒரு சமஸ்டித் தீர்வு என்று தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அது லேபல் இல்லாத சமஸ்ரி என்றும் சொன்னார்கள். ஆனால் கஜேந்திரக்குமார் அது ஒற்றை ஆட்சிக்கு உட்பட்டது என்று திரும்பத் திரும்பச் சொன்னார். இப்பொழுதும் சொல்கிறார்.
அனுர அரசாங்கம் எக்கிய ராஜ்யவை மீண்டும் கையில் எடுத்தால் அதை எதிர்க்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் கூறுகிறார்.எக்கிய ராஜ்ய தீர்வை நோக்கி உழைத்த காலகட்டங்களில் அனுரவின் கட்சியாகிய ஜேவிபி யாப்புருவாக்கக் குழுவுக்கு வழங்கிய பரிந்துரைகளில் மூன்று விடயங்கள் முக்கியமானவை என்று கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டுகிறார். முதலாவதாக, ஆளுநரின் அதிகாரம். இப்பொழுது இருப்பதைப் போலவே ஆளுநருக்கு அதிகாரம் இருக்க வேண்டும். அதாவது ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் ஓர் ஆளுநருக்கு இருக்கக்கூடிய அதி உயர் அதிகாரங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும். இரண்டாவது, வடக்கையும் கிழக்கையும் இணைக்கக்கூடாது. மூன்றாவது, போலீஸ் அதிகாரங்களை வழங்கக்கூடாது. இந்த மூன்று பரிந்துரைகளையும் ஜேவிபி யாப்புருவாக்கக் குழுவின் முன் பரிந்துரைகளாக முன்வைத்ததாக கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டுகிறார்.
அவ்வாறு அனுர அரசாங்கம் எக்கிய ராஜ்ஜிய என்ற தீர்வுப் பொதியை மீண்டும் தூசு தட்டி எடுக்குமாக இருந்தால், அதை எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கஜேந்திரகுமார் அழைப்பு விடுத்திருந்தார்.அவருடைய அழைப்பின் அடிப்படையில் சிறீதரனையும் செல்வம் அடைக்கலநாதனையும் அவர்களுடைய இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று அவர் சந்தித்தார்.இந்த மூன்று தரப்புக்களும் தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த தீர்வு முன் மொழிவிவின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.
தமிழ் மக்கள் பேரவையின் முன்மொழிவு எனப்படுவது சமஸ்டியைத் தீர்வாக முன்வைக்கின்றது. எனவே தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் ஒரு சமஸ்ரித் தீர்வை முன்வைத்து பேச்சுவார்த்தை மேசையில் அமர வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்பார்க்கின்றது.
கஜனின் அழைப்புக்கு சிறீதரனும் செல்வமும் இணங்குவார்களாக இருந்தால் அது ஒரு புதிய யாப்புருவாக முயற்சியை எதிர் கொள்ளும் நோக்கிலான தமிழ் ஐக்கிய முயற்சியாக அமையக்கூடும். இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சிக்குள் தொடர்ந்து புகைந்து கொண்டிருக்கும் உட்கட்சி மோதல்களுக்கும் ஒரு பங்கிருக்கும். சிறீதரன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதனை அது தீர்மானிக்கக் கூடும்.
அதேசமயம் சுமந்திரன் அணி இந்த விடயத்தில் என்ன முடிவெடுக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.ஏனென்றால், கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடந்த மத்திய செயற்குழு கூட்டத்தின் பின் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களின்படி அந்த ஐக்கிய முயற்சிக்குள் தமிழரசுக் கட்சி இணைவதை கட்சியின் மத்திய குழு அனுமதிக்குமா என்ற கேள்வி பலமாக எழுகின்றது.
கட்சியின் மத்திய குழுவில் இப்பொழுதும் சுமந்திரனின் ஆதிக்கம் அதிகம். அதேசமயம் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் சாணக்கியன் சத்தியலிங்கம் ஆகிய இருவரும் சுமந்திரனின் செல்வாக்கு உட்பட்டவர்கள் என்று கருதப்படுகின்றது. ரவிகரன் முன்பு சுமந்திரனுக்கு நெருக்கமானவராக பார்க்கப்பட்டவர். ஆனால் இப்பொழுது அவர் அவ்வாறில்லை என்றும் கருதப்படுகின்றது. மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிறீரீநேசன் சுமந்திரனின் செல்வாக்குக்குள் வரக்கூடியவர் அல்ல. புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிறீநாத் பெரும்பாலும் சுமந்திரனின் பக்கம் போக மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்பாறையில் கோடீஸ்வரனும் சுமந்திரனின் பக்கம் போக மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருகோணமலையில் குகதாசன் இரண்டு அணிகளுக்கும் இடையே தெளிவான நிலைப்பாட்டை எடுக்க மாட்டார். என்று நம்பப்படுகிறது. இந்த விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் அழுத்தம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இருக்கும். அதுவும் இந்த அணிச்சேர்க்கைகளைத் தீர்மானிக்கும்.
எனவே புதிய அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கினால், அதை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் ஐக்கியமாக எதிர்கொள்ளுமா இல்லையா என்பது பெருமளவுக்கு தமிழரசு கட்சியின் முடிவில்தான் தங்கியிருக்கிறது என்று தெரிகிறது. தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் ஒருமித்து முடிவெடுக்குமா? அல்லது ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டதுபோல இரண்டு அணிகளாக பிளவுண்டு நிற்குமா? இந்த விடயத்தில் சிறீதரன் மத்திய குழுவை மீறி, சுமந்திரனின் செல்வாக்கை மீறி முன்கை எடுப்பாரா?
தமிழரசுக் கட்சி ஒருமித்து முடிவெடுக்க முடியாமல் குழுக்களாகப் பிரிந்து நிற்பதும் நீதிமன்றத்தில் நிற்பதும் அந்தக் கட்சியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் அரசியலையும் பாதித்து வருகிறது.நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்ததை வைத்துக் கொண்டு, இறுமாப்போடு ஐக்கிய முயற்சிகளை அணுகுவார்களாக இருந்தால்,அவர்கள் இறுதியிலும் இறுதியாக தாங்களும் தோற்று தமிழ் மக்களையும் தோற்கடிக்கப் போகிறார்கள் என்று பொருள்.
இம்மாதம் 18 ஆம் திகதியோடு தமிழரசு கட்சிக்கு 75 வயதாகிறது. 75 வயது என்பது ஒரு முதியவரின் வயது. ஆனால் தமிழரசுக் கட்சி ஒரு முதியவரை போலவா முடிவெடுக்கின்றது? நடப்பு நிலைமைகளைப் பார்த்தால் அது ஒரு அறளை பெயர்ந்த முதியவரைப்போல முடிவெடுப்பதாக அல்லவா தெரிகிறது ?