ஹட்டன், மல்லியப்பூ பகுதியில் சனிக்கிழமை (21) இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவர் உட்பட மூவரின் உயிரைப் பறித்த தனியார் பஸ்ஸில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
காலை 10.00 மணியளவில் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
ஆரம்பக் கட்ட விசாரணைகளில் சாரதியின் கட்டுப்பாட்டை பஸ் இழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விபத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகளை யாரோ பின்னர் அழித்ததை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
எனினும், மேம்பட்ட தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி, பொலிஸார் வெற்றிகரமாக அழிக்கப்பட்ட காட்சிகளை மீட்டெடுத்துள்ளனர்.
இந்தக் காட்சிகள் விபத்து தொடர்பான முக்கியமான ஆதாரங்களை வழங்கியுள்ளது.
அந்தக் காட்சியில் சாரதி பஸ்ஸை செலுத்தும் போது, எதிர்பாராத விதமாக சாரதிக்கான பஸ் கதவு திறக்கப்பட்டமையினால், அவர் சமனிலையை இழந்துள்ளார்.
இதனால் சாரதி ஸ்டீயரிங்கை பிடித்துக் கொள்ளும் முயற்சி தோல்வியடைய பஸ், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானமை தெரியவந்துள்ளது.
எவ்வாறெனினும், விபத்து தொடர்பில் குறித்த பஸ்ஸின் சாரதி எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விபத்தின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக, சாரதி தற்போது பொலிஸ் காவலில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.