டிசம்பர் 25 இன்று உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள்.
இந்த நாள் கடவுளின் மகனான இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிப்பதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.
இந்த புனித நாள் இயேசு கிறிஸ்துவின் அன்பு, கருணை, இரக்கம் ஆகியவற்றையும் கொண்டாடுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சொந்தங்கள், உறவுகள் ஒருங்கிணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவர்.
இப்படி எண்ணற்ற சிறப்புகள் அடங்கிய கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
கிறிஸ்துமஸ் வரலாறு
கிறிஸ்தவர்கள் புனித நூலாக கருதும் பைபிளில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த திகதி குறித்த விவரம் இடம்பெறவில்லை.
அதேபோல எந்த மாதம் என்ற தகவலும் தெளிவாக இல்லை.
அந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடவில்லை என கூறப்படுகிறது.
அதேபோல அவருடைய இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் நிகழ்வுகளை கடைபிடிக்க தவறினர்.
பைபிள் போதனைகளை வழங்கும் புனித நூலாகவே விளங்கியுள்ளது.
சில நூற்றாண்டுகளுக்கு பிறகு கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை டிசம்பர் 25 இல் கொண்டாட முடிவெடுத்தனர்.
இந்த கொண்டாட்ட திகதிக்கும் பைபிளில் உள்ள குறிப்புக்கும் நேரடி தொடர்பு இல்லை.
எனினும் ரோமானிய குளிர்கால விழாவுடன் ஒத்துப்போகிறது.
பண்டைய ரோமில் வித்தியாசமான காலண்டரை பின்பற்றினர்.
அதில் டிசம்பர் 25 ஆம் திகதி குளிர்கால விழா வந்தது.
இதை ரோமானியர்கள் வெல்ல முடியாத சூரியனின் பிறப்பாக கடைபிடித்தனர்.
குளிர்கால நிறைவு மற்றும் சூரியனின் மறுமலர்ச்சியாக டிசம்பர் 25 இல் கொண்டாட்டங்கள் அரங்கேறின.
இயேசு கிறிஸ்துவை உலகிற்கு ஒளி தந்தவராக கருதியதால் நாளடைவில் அது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு வழிவகுத்தது.
பைபிளிலும் ஜான் 8:12 இல் இயேசு கிறிஸ்து உலகின் ஒளியாக அடையாளப்படுத்தப்பட்டு இருந்தார்.
இயேசு பிறப்பு
336 அன்னோ டொமினியில் முதலாம் கிறிஸ்தவ ரோமானிய பேரரசர் ஆட்சி செய்த போது டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டதாக மற்றொரு தகவலும் உண்டு.
இயேசு பிரானின் தாயான மேரி மார்ச் 25 ஆம் திகதி கர்ப்பம் தரித்தார். இதற்கு அடுத்த 9 மாதங்களில் இயேசு பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ் முக்கியத்துவம்
உலக மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இந்த கிறிஸ்துமஸ் நன்நாளை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.
கிறிஸ்தவர்கள் தங்களுடைய குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆசைப்பட்ட பரிசுகளை வாங்கி கொடுத்து அன்பை பரிமாறுவார்கள்.
அதே போல இயேசு பிரானின் போதனைகளை நினைவு கொண்டு அவர் காட்டிய பாதையில் கிறிஸ்தவர்கள் பயணிக்க வேண்டும் என்பதையும் கிறிஸ்துமஸ் வலியுறுத்துகிறது.