கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பிரித்தெடுப்பதை புலனாய்வாளர்கள் முடித்துவிட்டதாக தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காக்பிட் குரல் பதிவில் (cockpit voice recorder) இருந்து தரவு இப்போது ஆடியோ கோப்பாக மாற்றப்படும், அதே நேரத்தில் இரண்டாவது கருப்பு பெட்டி – ஒரு விமான தரவு பகுப்பாய்வுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் என்று அமைச்சின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
(காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆனது விமானிகளின் உரை, விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறையுடனான உரை, விமானத்தின் சுவிட்ச் மற்றும் விமான இஞ்சின் ஒலியென அனைத்தையும் பதிவு செய்கிறது.)
இந்த தரவுகள் விமான விபத்துக்கு வழிவகுத்த முக்கியமான தருணங்களைப் பற்றிய மேம்பட்ட தகவல்களை வழங்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
தாய்லாந்திலிருந்து தென்கொரியாவுக்கு 181 பயணிகளை சுமந்து வந்த ஜெஜு ஏரின் 7C2216 விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் அடிப்பகுதி உரசியபடி சென்ற நிலையில், திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி பலத்த வேகத்தில் சுற்றுச்சுவரில் மோதியது.
இதனால் விமானம் முழுமையாக தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் மொத்தமாக 179 பேர் உயிரிழந்திருந்தனர்.
இது தென் கொரிய மண்ணில் நடந்த மிக மோசமான விமான விபத்து ஆகும்.