சீனாவில் வேகமாக பரவி வருவதாக கூறப்படும் புதிய வகை வைரஸ்கள் தொடர்பாக சீனா தற்போது விளக்கமளித்துள்ளது.
இதில், நாட்டில் குறிப்பிடத்தக்க சுகாதார அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என்றும் இந்த வைரஸ் தாக்கமானது வழக்கமான குளிர்கால தொற்றுதான் என்றும் சீனா தரப்பு கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி 5 வருடங்கள் கடந்துள்ள நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வகை வைரஸ்கள் பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
Human metapneumovirus (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது தொடர்பான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு தொடர்பாக சீனா தற்போது விளக்கமளித்துள்ளது.
அந்தவகையில், நாட்டில் குறிப்பிடத்தக்க சுகாதார அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என்றும், இது வழக்கமான குளிர்கால தொற்றுதான் என்றும் சீன தரப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வடக்கு காற்றின் காரணமாக, குளிர்காலத்தில் வழக்கமாக சீனாவில் நுரையீரல் பாதிப்பு, தொற்று நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது வழக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நோய் தாக்கமானது குறைவான பாதிப்பை கொண்டிருக்கிறது என்றும் கடந்த ஆண்டை விட பாதிப்பும் தீவிரமும் குறைவுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீன மக்கள் மற்றும் சீனாவில் வாழும் வெளிநாட்டினரின் சுகாதாரத்தை உறுதி செய்வதில், சீன அரசாங்கம் எப்போதும் கவனம் செலுத்தும் எனத் தெரிவித்துள்ள அவர், சீனாவுக்கு பயணம் செய்வது இன்னமும் பாதுகாப்பானதுதான் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
அத்தோடு, நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது என்றும் எதுவும் அச்சுறுத்தும் வகையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனத்தில் கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் ஏராளமான மக்கள் குவிந்து வரும் நிலையில், இதற்கு எச்.எம்.பி.வி. அல்லது மெடாநியுமோ வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
வைரஸ் தாக்கம் அங்கு காணப்பட்டாலும், இதுவரை அதனை அவசரநிலையாக சீன சுகாதாரத் துறையோ அல்லது உலக சுகாதார அமைப்போ அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பான நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.