சீனாவில் சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) வைரஸ் தொற்று இந்தியாவில் திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, பெங்களூரில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில், எட்டு மாத ஆண் குழந்தையின் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக கர்நாடக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநில சுகாதாரத் துறை சுயாதீனமாக தொற்று அறிக்கையை சரிபார்க்கவில்லை என்றாலும், தனியார் வைத்தியசாலையில் கண்டுபிடிப்புகளின் நம்பகத்தன்மையை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
எனினும், இதன் வகை என்ன என்பதை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.
மனித மெட்டாப்நியூமோ வைரஸ், பொதுவாக 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கண்டறியப்படுகிறது மற்றும் உலகளவில் 0.7 சதவீத காய்ச்சல் நோயாளிகளில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் மற்றும் அறிக்கைகள் காரணமாக கவனத்தை ஈர்த்துள்ளது.
அண்மைய நாட்களில் சீனாவில் உள்ள வைத்தியசாலைகளில் HMPV உட்பட சுவாச நோய்களின் அதிகரிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
2001 ஆம் ஆண்டில் நெதர்லாந்தின் ஆராய்ச்சியாளர்களால் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட HMPV, கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணம் என்று அமெரிக்க நுரையீரல் சங்கம் தெரிவித்துள்ளது.
இருமல் அல்லது தும்மலில் இருந்து வரும் சுவாசத் துளிகள் மூலமாகவோ அல்லது கதவு கைப்பிடிகள் அல்லது பொம்மைகள் போன்ற அசுத்தமான மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலமாகவோ, பாதிக்கப்பட்ட நபர்களுடனான நெருங்கிய தொடர்பு மூலம் வைரஸ் முதன்மையாக பரவுவதாகவும் கூறப்படுகிறது.